முழு ஈரானையும் அழித்துவிடுவேன்.. – டிரம்ப்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தாம் தற்போது பரிசீலித்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘Fox News’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“முழு நாட்டையும் எப்போது, எவ்வாறு முற்றிலும் அழிப்பது என்பதே எனது கேள்வி. அவர்கள் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும்,” என்று கூறியுள்ள டிரம்ப், இந்த போரில் எதிர்காலத்தில் மிகவும் பாரிய சம்பவங்கள் நிகழும் என்றும் எச்சரித்தார். இருப்பினும், அது குறித்த மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை.
அதேவேளை, இந்த வாரம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரின் போது ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனை (Masoud Pezeshkian) சந்திப்பதற்கு தாம் திறந்த மனதுடன் இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கிய இந்த மோதலுக்கு மத்தியில், டிரம்ப் இதற்கு முன்னரும் பலமுறை இத்தகைய கடுமையான போர் எச்சரிக்கைகளை விடுத்திருந்தார்.
இதற்கிடையில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் இலக்குகளை குறிவைத்து கடுமையான பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரானிய ராணுவ மத்திய கட்டளையகம் எச்சரித்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளும் இப்போரின் நேரடிப் பங்காளிகளாகக் கருதப்படும் என்று தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்கா தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகத் தங்களிடம் உளவுத்துறை தகவல்கள் உள்ளதாகவும் கூறியுள்ளது. எதிரிகளைப் பின்வாங்கச் செய்யவும், தமது வெற்றிகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும் போர் புரிவதுடன், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.
இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. ஈரானின் ஆதரவைப் பெற்ற ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த செப்டம்பர் 19 அன்று சவூதி அரேபியாவின் ரியாத் நகரைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தினர். இதன் போது பிரதான சர்வதேச விமான நிலையப் பகுதியில் பெரிய அளவில் கருப்புப் புகை கிளம்பியதைக் காட்டும் வீடியோ காட்சிகளை ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
செங்கடல் பகுதியில் தங்களது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தியதன் மூலம், பாப் எல்-மண்டெப் (Bab el-Mandeb) நீரிணையின் கடல்சார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் திறனை ஹூதிகள் பெற்றுள்ளனர். மறுபுறம், ஹோமுஸ் (Hormuz) நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை ஈரான் கிட்டத்தட்ட முழுமையாகத் தடைசெய்துள்ளதால், எண்ணெய் வளம் மிக்க வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி ஏற்றுமதி உலகச் சந்தைக்குச் செல்வது தடைபட்டு, உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அதிவேகமாக உயர்ந்துள்ளன. அமெரிக்காவிலும் ஒரு கேலன் டீசலின் சராசரி விலை $6.50 ஐத் தாண்டி சாதன அளவை எட்டியுள்ளதாக ‘AAA’ நிறுவன அறிக்கைகள் காட்டுகின்றன.
அமெரிக்க மத்திய கட்டளையகம் காங்கிரஸ் தேசிய பாதுகாப்பு குழுக்களுக்கு வழங்கிய அறிக்கைகளின்படி, செப்டம்பர் 03 ஆம் தேதி வரை இந்த போருக்காக அமெரிக்க ராணுவம் குறைந்தபட்சம் 43.6 பில்லியன் டாலர்களைச் செலவிட்டுள்ளது.
இருப்பினும், ‘USA Today’ நாளிதழ் தெரிவித்துள்ளபடி, இந்த மதிப்பீடு உண்மையான தொகையை விட மிகவும் குறைவானதாகும். ஈரானிய தாக்குதல்களால் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை விநியோக மையம் உட்பட மத்திய கிழக்கில் உள்ள படைத்தளங்களுக்கு ஏற்பட்ட பாரிய சேதங்களைச் சீரமைப்பதற்கான செலவுகள் இதில் சேர்க்கப்படவில்லை என்று அந்த நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
பென்டகனின் கணக்கீடுகளின்படி, போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்குப் பதிலாக புதிய ஆயுதங்களைப் பெறுவதற்கு மட்டுமே 28.1 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீடிக்கும் இந்த போர்ச் சூழல் காரணமாக ஆயுதக் கையிருப்பு குறைந்து வருவது, இந்தோ-பசிபிக் பிராந்தியம் போன்ற உலகின் பிற பகுதிகளில் அமெரிக்காவின் பாதுகாப்பை ஆபத்திற்குள்ளாக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மோதல்கள் தொடங்கியது முதல் இதுவரை குறைந்தது 18 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



