News

அர்ச்சுனா MP, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

வைத்தியர் சுகுணன் பற்றி முகநூலில் எழுத தடையும் விதிப்பு

-கனகராஜா சரவணன்-

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தொடர்பாக அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமனாதன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ஹரீஸ் உட்பட 6 பேருக்கும் யூடியூப் மற்றும் முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் 6 பேரையும் இந்த வழக்கு முடியும் வரை வைத்தியர் சுகுணன் பற்றி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கு தடைவிதித்து எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மட்டக்களப்பு நீதவான் இன்று திங்கட்கிழமை (28) உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த மாதம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார பணி உதவியாளர் நியமிக்கப்பட்டவர்களின் ஆடை சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது வைத்திய பணிப்பாளர் வைத்தியர் சுகுணனின் குடும்பம் தொடர்பாக அவதூறாக சமூக வலைத்தளங்கள் முகநூல் ஊடாக தடை செய்யப்பட்ட கூற்றுக்கள் பதிவிடப்பட்டது

இந்த அவதூறு தொடர்பாக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் வைத்தியர் கு.சுகுணன் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீப் முகமது முகமது ஹரீஸ், மௌலவி முஹமத் மிப்லால், உமர் லெப்பை மப்ரூப், அஹமட் லெப்பை முகமது முத்தார், முகமது இப்ராஹிம், மற்றும் யூடியூப். முகநூல் தளங்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை (21) வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த குறித்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (22) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அண்ணாதுரை தரஷ்சினி திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது வழக்காளி சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி லக்சான் டயஸ், மற்றும் கனகலிங்கம் கிசோபனா ஆஜராகிய சமர்பணம் முன்வைத்தனர்.

இதன்போது குறித்த வழக்கை நிபந்தனைக்கு உட்பட்ட கட்டளையை பெறுவதா இல்லையா தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக எதிர்வரும் 28ஆம் திகதிக்கு நீதவான் வழக்கை திகதியிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்காக இன்று திங்கட்கிழமை (28) திறந்த நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொண்ட போது குறித்த ஆறு பேரையும் வைத்தியர் சுகுணன் பற்றியோ அவரது குடும்பம் பற்றியோ பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்களில் இந்த வழக்கு முடியும் வரை பதிவிடுவதற்கு தடைவிதித்து எதிர்வரும் 12ம் திகதி நீதிமன்றில் 6 பேரும் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Recent Articles

Back to top button