News

மக்கள் அரசாங்கத்துக்கு ஆதரவாக பேரணி செல்கிறார்கள் – பெளத்த தேரர்களின் கோரிக்கைக்கு எதிராகவே இவ்வாறு பேரணி செல்கிறார்கள் ; தெரன திலீத் ஜெயவீர கவலை

நாட்டை ஓர் அங்குலம்கூட முன்னோக்கிக் கொண்டு செல்லத் தவறியுள்ள தற்போதைய அரசாங்கம், மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு எதிராகவே கொழும்பில் மக்கள் பேரணிகளை ஏற்பாடு செய்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.


எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “இந்த அரசாங்கம் வந்தவுடன் ஏதோவொரு மாயம் நடக்கும், வெளிநாடுகளில் உள்ள ஊழல் பணம் மீட்கப்பட்டு அது எங்களிடையே பகிரப்பட்டு நமக்கு பணம் கிடைக்கும் என்று இப்போது நீங்கள் நினைத்திருக்கலாம், அப்படித்தானே கூறினார்கள்? ஊழலுக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்படும் என்று கூறிவிட்டு, அந்த நல்லாட்சிக் காலத்தில் தொடரப்பட்ட சில வழக்குகளுக்குத் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.


ஆனால், இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒரு செம்பு காசாவது, ஒரு சதம் கூட அல்லது ஒரு டொலர் கூட கிடைத்ததா? இப்போது மீட்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் கையகப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாங்களும் அதற்கு ஆதரவாகக் கையை உயர்த்தினோம்.


இப்போது மீட்கப்பட்ட சொத்துக்கள் கொண்டுவரப்பட்டு, எமது முதன்மைக் கணக்கில் மீட்கப்பட்ட சொத்துக்களிலிருந்து கிடைத்த வருமானம் என்று உள்ளதா? மத்திய வங்கியின் அறிக்கையில் அத்தகைய வருமானம் குறிப்பிடப்பட்டுள்ளதா? அது உங்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட வருமானமாகும்.


இந்த நாட்டின் திறைசேரி நிரம்பி வழிவதாகப் பெருமைக் கொள்ளும் எமது அதிமேதகு சகோதர ஜனாதிபதி கூறுவது, உங்கள் கொத்தமல்லிக்கும், கருவாட்டுக்கும் வரி விதித்துத்தான். இந்த அரசாங்கத்திற்குக் கிடைத்த மொத்த வருமானத்தில் 50 சதவீதத்தை நேரடியாகவே ஏழை எளிய மக்களிடமிருந்து வரியாக அறவிட்டுள்ளனர்.


யார் திருடன்? அவர்கள் முன்பு கேட்டது போல, யார் திருடன்? இந்த ஏழை எளிய மக்களிடமிருந்து இரக்கமின்றிப் பணத்தைப் பறிப்பவர்தான் மிகப்பெரிய திருடன் அல்லவா?


நான் பார்த்தேன், அங்கே ஒரு பேரணி நேரலையாகச் சென்று கொண்டிருக்கிறது. அந்த மார்க்சியவாதிகள்.. எதற்காகப் பேரணிகள் செல்கிறார்கள்? எமது மகா சங்கத்தினரின் இந்த நியாயமான கோரிக்கைக்கு எதிராகப் பஸ்களில் ஆட்களைக் கொழும்புக்குக் கொண்டுவந்து, இப்போது பேரணி செல்ல வேண்டுமா? இது அரசாங்கம்தானே? எதிர்க்கட்சி இல்லையே பேரணி செல்வதற்கு? எந்த அதிகாரமும் எங்களிடம் இல்லை.


அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கம்தான் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகப் பேரணி செல்கிறது. அரசாங்கமே பேரணிகளை நடத்துகிறது. இது எப்படி இருக்கிறது? ஏன்? இந்த நாட்டை ஒரு அங்குலம்கூட முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது. திறைசேரி நிரம்பி வழிகிறது, நீங்களோ துயரத்தில் உள்ளீர்கள்” என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button