பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் ; ஐக்கிய தேசியக் கட்சி அவசர வேண்டுகோள்

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உடனடியாக ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி (UNP) கோரிக்கை விடுத்துள்ளது.
மூன்று முக்கிய பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டின் மூலம் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நடத்தப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம், மகாநாயக்க தேரர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அக்டோபர் 26 அன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக அதிகபட்சமாக 18 மாத சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்படலாம் என்ற முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் விளக்கத்தை அக்கட்சி மேற்கோள் காட்டியுள்ளது.
அதன்படி, ஞானசார தேரர் ஏற்கனவே இக்குற்றத்திற்காக 10 மாதங்களுக்கும் மேலாகச் சிறை தண்டனையை அனுபவித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு இணங்க, இதற்கு முன்பும் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டிருந்ததை ஐக்கிய தேசிய கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், ஞானசார தேரருக்கு மீண்டும் ஒருமுறை ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்ச நீதிமன்றமும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஞானசார தேரரின் விடுதலைக்காக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலோ அல்லது சத்தியாக்கிரகப் போராட்டத்திலோ கலந்துகொள்ளாத பௌத்த தேரர்களுக்கு எதிராக அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றதையிட்டு ஐக்கிய தேசிய கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் கடுமையான தவறுகள் என்று வர்ணித்துள்ள அக்கட்சி, ஞானசார தேரரின் துறவுக் கோலத்தைக் கழற்றுமாறு உத்தரவிட்டவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
தற்போது நிலவிவரும் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மகாநாயக்க தேரர்களின் பங்களிப்புடன் அரசாங்கம் உடனடியாக ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தியுள்ளது.



