News

இஸ்ரேலிய தேர்தல்: அரபு கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக நெதன்யாகுவின் கட்சி குற்றச்சாட்டு

அரபு அரசியல் கட்சிகள் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் பின்னர், அவர்கள் அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் தீர்க்கமான காரணியாக உருவெடுத்துவரும் வேளையில், தேர்தலில் அரபு கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் (Likud) கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரும் ஷின் பெட் (Shin Bet) பாதுகாப்புப் பிரிவினரும் முழுமையான விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் எனவும் லிகுட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

லிகுட் கட்சி விடுத்துள்ள அறிக்கையில், லஞ்சம் வழங்கல், அச்சுறுத்தல், வன்முறை, போலியான ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் சட்டவிரோத மென்பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற பாரிய குற்றங்கள் மூலம் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரபு கட்சிகளே இத்தேர்தல் முறைகேடுகளைப் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சீட்டுகளுடன் பணம் அடங்கிய கவர்த்தாள்கள், தேர்தல் குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள், ஒரே நபர் பலமுறை வாக்களித்தமை மற்றும் வாக்காளர்களைச் சட்டவிரோதமாக வழிநடத்தும் மென்பொருட்களைப் பயன்படுத்தியமை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சாட்சியங்கள் பொலிஸார், ஷின் பெட் அமைப்பு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லிகுட் கட்சி கூறுகிறது.

85 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குள் எண்ணப்பட்டுள்ள நிலையில், ராம் (Ra’am) மற்றும் ஜொயிண்ட் லிஸ்ட் (Joint List) ஆகிய அரபு கட்சிகளின் கூட்டணி சாதனைப் படைக்கும் வகையில் 19 இடங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், நெதன்யாகுவின் தரப்புக்கு 53 இடங்களே கிடைத்துள்ளன.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த காடி ஐசென்கோட்டின் (Gadi Eisenkot) தரப்புக்கு 48 இடங்கள் கிடைத்துள்ள நிலையில், எந்தவொரு தரப்பினராலும் நெசெட் (Knesset) நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலமான 61 இடங்களைப் பெற முடியாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, லிகுட் கட்சியின் முறைப்பாடு தனக்குக் கிடைத்துள்ளதாகவும், தேர்தலின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் சாதாரண விசாரணைச் செயற்பாட்டின் கீழ் அக்குற்றச்சாட்டுகள் பரிசீலிக்கப்படும் எனவும் மத்திய தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படத் தயார் என்றாலும், நிலவும் காசா போர் மற்றும் மேற்கு கரை குடியேற்றப் பிரச்சினைகள் காரணமாக நேரடியாகக் கூட்டு அரசாங்கத்தில் இணைந்துகொள்ளும் எண்ணம் இல்லை என ஜொயிண்ட் லிஸ்ட் கட்சியின் தலைவர் யூசெப் ஜபரீன் (Yousef Jabareen) தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் போது தமது வாக்காளர்களின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என ராம் கட்சியைச் சேர்ந்த யோவ் செகலோவிட்ஸ் (Yoav Segalovitz) குறிப்பிடுகின்றார்.

இதற்கிடையில், அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்காக அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்ற உறுதிமொழிகளை விலக்கிக் கொள்ளுமாறு ஜனநாயகக் கட்சிகளின் (Democrats) யாயிர் கோலான் (Yair Golan) ஏனைய எதிர்க்கட்டுக் குழுக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recent Articles

Back to top button