நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார் என அர்ச்சுனா M P அறிவித்தார் – மேலும் சஜித், ரணில் போன்றோர் என்னை அவர்களின் கட்சிகளில் இணைந்து வடக்கு – கிழக்கை பாரமெடுக்குமாறு கேட்டனர்.. நான் மறுத்து விட்டேன்

கனகராஜா சரவணன்
இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கலவரங்களைச் செய்த ஜே.வி.பி. (JVP) தரப்பினர், எங்களுக்கு மாகாணசபையைப் பெற்றுத் தருவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனமாகும்.
அதேவேளை, மாகாணசபை தேர்தல் நடத்தப்படமாட்டாது என்பதுடன், நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார்; இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி ஒருவர் வருவார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. அர்ச்சுனா தெரிவித்தார்.
மட்டக்களப்பு ‘வொய்ஸ் ஒப் மீடியா’ ஊடக நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது;
“ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அதேவேளை, மாகாணசபை தேர்தல் இந்த வருடம் நடக்கும் என எதிர்பார்த்தோம்; அது மார்ச் மாதம் நடக்கும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால், இந்த முறை வரவு-செலவுத் திட்டத்தில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்பதுடன், வடக்கில் நான்கு மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கம் தன்வசப்படுத்தியுள்ளது.
எனவே, மாகாணசபை தேர்தல் நடக்காது என்பது தெளிவாகிறது.
இந்த ஜே.வி.பி. கட்சியினர் 159 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி, பிரதமர் உட்பட நீதித்துறையையும் தங்கள் கையில் வைத்துள்ளனர்; அத்தகைய பலத்தை மக்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா தனது உரையில், இளைஞர்கள் முழு விளக்கத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, அதிலிருந்து விலகி அவர்கள் பாராளுமன்றத் தேர்தலையோ அல்லது ஜனாதிபதித் தேர்தலையோ நடத்த மாட்டார்கள் என்ற நிலைமைதான் காணப்படுகிறது.
அதேவேளை, நாமல் ராஜபக்ஷவை இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைப்பதே அவர்களின் முக்கியமான நோக்கமாகும். அதற்கு ‘ரையல் பார்’ (Trial-at-Bar) போன்ற முறைகளைக் கொண்டுவந்து, அவரை ஒருபோதும் வெளியில் விடப்போவதில்லை.
இந்த நிலையில், எதிர்காலத்தில் இலங்கைக்குப் புதிய ஜனாதிபதி ஒருவர் வருவார். சிங்கள மக்கள் மத்தியில் எந்த ஜனாதிபதி என்பது முக்கியமல்ல; மாறாக, மூன்று வேளையும் சோறு கிடைத்தால் போதும் என்ற நிலையே உள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய இந்த ஜனாதிபதியும் பதவியில் இருந்து வெளியேறுவதற்கு அதிக காலம் எடுக்காது.
நான் ஒருநாளும் எந்தக் கட்சியிலும் இணையமாட்டேன். கட்சிகளில் இணைபவர்களைப் பார்த்தால், சுயமாகத் தேர்தலில் வெல்ல முடியாதவர்கள்தான் கட்சிகளில் சென்று இணைவார்கள். சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க போன்றோர் தமக்கடுத்த கட்சிகளில் இணைந்து வடக்கு – கிழக்குப் பகுதிகளைப் பொறுப்பேற்குமாறு என்னைக் கேட்டனர்.
நான் சுயேச்சையாகக் கொழும்பில் போட்டியிட்டு வெல்லக்கூடிய நிலையில் இருக்கிறேன். எனவே, இன்னொரு கட்சியில் சேர வேண்டிய தேவை எனக்கு இல்லை. என்னை நம்பி எனது கட்சியில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்; கட்சியைப் பதிவு செய்வதற்காகவும் அனுப்பியுள்ளோம். ஆதலால், எனக்கு எவருடைய கட்சியிலும் போய்ச் சேர வேண்டிய தேவை கிடையாது.
‘எதிரியின் எதிரி எனக்கு நண்பன்’ எனத் தேசியத் தலைவர் கூறுவார்; அவ்வாறு செயற்படுவதுதான் இராஜதந்திரம். அந்த வகையில், நாமலின் பரம எதிரி அநுரகுமார திஸாநாயக்க ஆவார். அநுர எனக்கு எதிரி என்ற ஒரே காரணத்திற்காக, நான் நாமலைத் தூக்கிப் பிடித்து அநுராவுக்குக் குத்து வெட்டு வேலைகளைச் செய்யப் போவதில்லை; எனவே, நான் போய் நாமல் ராஜபக்ஷவின் கட்சியில் இணையப் போவதில்லை.
எதிர்ப்பு அரசியல் செய்து என்ன மிஞ்சியது? எனவே, எதிர்ப்பு அரசியல் செய்ய நான் தயாரில்லை; அதேவேளை, தமிழ் தேசியவாதத்தைக் விட்டுக் கொடுக்கவும் தயாரில்லை. கார்த்திகை மாத உரை ஆரம்பித்ததே மாவீரர்களுக்காகத்தான். எனது தந்தை ஒரு மாவீரர். எனவே, முட்டாள்கள் செய்யும் அரசியல் மக்களுக்கு எந்த நன்மையும் பயக்காது. அரசியல் என்பது ஒரு இராஜதந்திரமாகும். முட்டாள்தனமாக இன்னார் கட்சி, மன்னார் கட்சி என்று மாலை போட்டுக் கொள்வது அரசியல் அல்ல.
நான் இப்போது செய்வது ஒரு இராஜதந்திரமான நகர்வாகும். எங்களுடைய தமிழ் அரசியல்வாதிகள் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகவே நல்லுறவைப் பேணினர். எனவே, நான் ஒருபோதும் எந்தக் கட்சியுடனும் இணையப் போவதில்லை” என்றார்.



