News

ராஜாங்கனை தேரரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை – அனுராதபுர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரிடம் விளக்கம் கேட்டது நீதிமன்றம்

ருவன்வெலி மகா சாயாவிற்கு அருகில் ஏற்பட்ட மோதலைத் தூண்டியதாகக் கூறப்படும் ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் மற்றும் 25 இற்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தத் தவறியமை குறித்து விளக்கமளிக்குமாறு, அனுராதபுரம் பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுராதபுரம் பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அவர் நேரடியாக ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பௌத்த பிக்குகள், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்கலாக ஏழு சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளான இந்திக்க இம்புல்பிட்டிய மற்றும் நுவன் பல்லந்துடாவ ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நிராகரித்த போதே, அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன இன்று (நவம்பர் 17) இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
.
இதே சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை காஸ்ஸப தேரரின் பெயர் இந்தப் பிணை மனுவில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
.
நீதிமன்ற விசாரணையின் போது, இந்த மோதலைத் தூண்டியதாகக் கூறப்படும் ராஜாங்கனை சத்தாரத்ன தேரர் உள்ளிட்ட 25 இற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை எனப் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். மேலும், மோதலைத் தடுப்பதற்கான வாய்ப்பு இருந்தபோதிலும் பொலிஸார் அதனைத் தடுக்கத் தவறிவிட்டதாகவும், காணொளி காட்சிகளின் அடிப்படையில் இச்சம்பவத்தை வழிநடத்துவதில் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் எழுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
.
இந்தச் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பிரதம நீதவான், பெயரிடப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதமைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்துமாறு குறித்த பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button