News

நபர் ஒருவரையும் அவரின் குடும்பத்தையும் பற்றி பேஸ்புக்கில் அவதூறு பதிவிட்டவருக்கு டிசம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் #இலங்கை

ஜயரத்ன மரண இறுதிச்சடங்கு சேவை நிறுவனத்தின் (Jayaratne Funeral Directors (Pvt) Ltd) பணிப்பாளர் ஒருவரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் இலக்கு வைத்து, திருத்தப்பட்ட (போலியாக வடிவமைக்கப்பட்ட) உள்ளடக்கங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
.
சந்தேகநபர் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான் நுவன் கௌசல்ய நேற்று (24) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
.
நுகேகொடை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் ஒரு வைத்தியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
.
இலங்கையின் முன்னணி இறுதிச்சடங்கு சேவை நிறுவனமான ஜயரத்ன இறுதிச்சடங்கு சேவை நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பணியகம் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
.
ஒலிப்பதிவொன்றையும் புகைப்படமொன்றையும் திரிபுபடுத்தி, குறித்த நிறுவனப் பணிப்பாளருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் பேஸ்புக்கில் வெளியிட்டதாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
.
திருத்தப்பட்ட தண்டனைச் சட்டக்கோவையின் 345 ஆம் பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 486 மற்றும் 285 ஆம் பிரிவுகளின் கீழான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நெவில் அபேரத்ன, குறித்த காணொளியை சுமார் 5,000 பேஸ்புக் பயனர்கள் பார்வையிட்டுள்ளதாகவும், இதனால் தனது கட்சிக்காரருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
.
மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்பு, மன உளைச்சல், நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றை சாதாரணமாகக் கருத முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த மேலதிக நீதவான், சந்தேகநபரின் பிணை மனுவை நிராகரித்ததுடன், அவரை டிசம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button