13 வயது சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பைப் பேணிய நபர் செய்த கீழ்த்தரமான செயல் – உடனடியாகக் களத்தில் இறங்கி கைது செய்த பொலிஸார் #இலங்கை

எம்.எச்.எம். சியாஜ்
மாரவில பகுதியில் 7ஆம் வகுப்பில் கல்வி பயிலும் 13 வயது பாடசாலைச் சிறுமியைப் பெற்றோரின் பராமரிப்பிலிருந்து கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், 35 வயதுடைய திருமணமான நபர் ஒருவர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹாவெவ – குடாவெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
அப்பாவிச் சிறுமியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ள இந்த நபர், சிறுமியின் தந்தையுடன் நெருங்கிய நட்பைப் பேணி வந்துள்ளார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறுமியுடன் அடிக்கடி உரையாடி, ஒரு கட்டத்தில் காதல் வலையை விரித்துள்ளார். அந்த நபர் திருமணமானவர் என்பது தெரிந்திருந்தும், சிறுமியும் அவரது பேச்சை நம்பி ஏமாந்துள்ளார்.
கடந்த ஜூலை 05ஆம் திகதி, “கடற்கரைக்குச் செல்வோம்” எனக் கூறிச் சிறுமியை அழைத்துச் சென்ற சந்தேகநபர், மஹாவெவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று முதன்முறையாகத் துஷ்பிரயோகம் செய்துள்ளார். மேலும் இரண்டு சந்தர்ப்பங்களில் அதே விடுதியில் வைத்து அச்சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் 1929 என்ற இலக்கத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் உடனடியாகக் களத்தில் இறங்கிய மாரவில பொலிஸ் நிலையச் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி, சிறுமியைப் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்றபோதே இந்தத் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
தற்போது பாதிக்கப்பட்டுள்ள சிறுமி, மருத்துவப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாரவில பொலிஸ் நிலையச் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ரணவீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.



