தன்னை துப்பாக்கியால் சுட வந்த நபருடன் போராடி தப்பித்த வெதுப்பக உரிமையாளர் – தெஹிவளை பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற பரபரப்பு சம்பவம்

தெஹிவளை, கடவத்த வீதியில் அமைந்துள்ள தஹநாயக்க விளையாட்டரங்கிற்கு அருகில் இன்று (04) இரவு 8.10 மணியளவில் பரபரப்பான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
முகத்தை மூடியபடி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர், அப்பகுதியிலுள்ள வெதுப்பக உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்றுள்ளார். எனினும், அந்தச் சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி இயங்கவில்லை.
இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வெதுப்பக உரிமையாளர், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த நபருடன் தைரியமாகப் போராடி, அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளார்.
இதனையடுத்து, தாக்குதல் நடத்த வந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவத்தின் போது வெதுப்பக உரிமையாளர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் துப்பாக்கியைக் கைப்பற்றியுள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபரை யாரென்று அடையாளம் காணவும் கைது செய்யவும் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்



