News

யார் காரணம்? உடனடியாக கண்டறிய வேண்டும் 

மாத்தறை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வாடிக்கையாளர்களும் வைப்பாளர்களும் தற்போது பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



மாத்தறை கூட்டுறவு கிராமிய வங்கி வைப்பாளர்கள் சங்கத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



2026 மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் மாதம் வரை வைப்பாளர்கள் தமது வைப்புத் தொகையைப் பயன்படுத்துவதிலும், வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதிலும் எவ்வித பிரச்சினையும் காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



எனினும், தற்போது அதிகாரம் படைத்த சிலரின் செல்வாக்கு காரணமாக கூட்டுறவுச் சங்கத்தின் நடவடிக்கைகள் முடங்கியுள்ளதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான வைப்பாளர்களும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்கான முறையான வழிமுறைகூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



கூட்டுறவுத் துறை நாட்டின் முக்கிய பொருளாதாரக் கருவிகளில் ஒன்றாகும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்துறையின் செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கு அரசாங்கமும் அதன் பிரதிநிதிகளும் காரணமாக உள்ளனரா என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.



கூட்டுறவுத் துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் வைப்பாளர்களின் பணத்துக்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு வைப்பாளர்கள் தமது பணத்தை மீளப் பெறுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.



மேலும், கடந்த சில மாதங்களாக இழந்த வட்டியுடன் கூடிய தமது மூலதனத்தை மீளப் பெறுவதற்கான சந்தர்ப்பத்தையும் வைப்பாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.



பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வந்த இந்தத் திட்டம் திடீரென முடங்கியதற்கான காரணம் என்ன என்பதையும், இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதையும் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.



கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் உள்ளிட்ட பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் வைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவர்கள் நாடாளுமன்றத்திற்கு முன்பாக விளக்கமளிக்க நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button