News

முஸ்லிம் ஒருவரின் வார்த்தைகளை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கான காரணமாக மாற்றிக்கொள்ள வேண்டாம் ; முன்னாள் அமைச்சர் அலி சப்ரிவிடுத்த வேண்டுகோள்

மற்ற எந்தவொரு இலங்கையரையும் போலவே, இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கும் “இலங்கை எங்கள் தாய்நாடு” என்று அதே பெருமையுடன் சொல்வதற்கு முழு உரிமை இருப்பதாக முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
.
இலங்கையை ஒரு பௌத்த நாடு என்று குறிப்பிடுவது தொடர்பாக கோபப்பட வேண்டிய எந்தவொரு காரணமும் தங்களுக்கு இல்லை என்றும் அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.
அத்துடன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பௌத்த மதத்தால் வளர்க்கப்பட்ட இந்த நாட்டின் கலாசார மரபின் பங்காளராக இருப்பது தனக்கும் பெருமையாக உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
.
ஒருவரின் வார்த்தைகளை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கான காரணமாக மாற்றிக்கொள்ள வேண்டாம் எனக் கோரும் அவர், உங்கள் திருமணத்துக்கும் மரணத்துக்கும் வந்தவர்கள் மற்றும் உங்களின் கஷ்டமான காலத்தில் அருகில் நின்றவர்களான உங்கள் முஸ்லிம் அண்டை வீட்டாரைப் பற்றி ஒரு கணம் சிந்தித்துப் பார்க்குமாறும் தனது பேஸ்புக் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
.
முன்னாள் அமைச்சரின் பேஸ்புக் பதிவு கீழே தரப்பட்டுள்ளது..
.
ரத்னதீப ஜன்ம பூமி
“ரத்னதீப ஜன்ம பூமி” என்ற சொற்களைக் கேட்கும்போது எனது மனதில் தோன்றுவது நான் பிறந்த, எனது பிள்ளைகள் பிறந்த, நாம் அனைவரும் நேசிக்கும் இந்த நாடுதான். மற்ற எந்தவொரு இலங்கையரையும் போலவே, இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்கும் “இலங்கை எங்கள் தாய்நாடு” என்று அதே பெருமையுடன் சொல்வதற்கு முழு உரிமை உள்ளது. அந்த உரிமைக்கு எவரிடமும் அனுமதி தேவையில்லை.
.
இலங்கை முஸ்லிம் என்ற வகையில் இந்த நாட்டின் பௌத்த மரபை நான் மனதார மதிக்கிறேன். இலங்கையை ஒரு பௌத்த நாடு என்று அழைப்பதில் கோபப்பட எங்களுக்கு எந்தக் காரணமும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பௌத்த மதத்தால் வளர்க்கப்பட்ட இந்த நாட்டின் கலாசார மரபின் ஒரு அங்கமாக இருப்பது எனக்கும் பெருமையே. அந்த மரபை மதிப்பதும், இந்தத் தாய்நாட்டின் மீது எனக்குள்ள உரிமையைப் பற்றிப் பெருமையுடன் பேசுவதும் எனக்கு ஒரே மாதிரியான இயல்பான விஷயமாகும்.
.
இந்தச் சர்ச்சைக்கு வழிவகுத்த கருத்தை வெளியிட்ட நபருக்கு நான் இதை நேரடியாகச் சொல்கிறேன். உங்கள் கருத்தைத் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் தேர்ந்தெடுத்த வார்த்தைகளுக்கான பொறுப்பும் உங்களுடையதே. தனது மதத்திற்கு மதிப்பை எதிர்பார்க்கும் ஒருவர், மற்றவர்கள் புனிதமாகக் கருதும் விஷயங்களுக்கும் அதே மதிப்பைக் காட்ட வேண்டும். நீங்கள் முன்வைத்த மரியாதைக்குறைவான கருத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நீங்கள் பேசியது உங்களுக்காக மட்டுமே. எனக்காகவோ அல்லது இந்த நாட்டின் முஸ்லிம் மக்களுக்காகவோ பேச உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. உங்கள் வார்த்தைகளால் மனம் புண்பட்டவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கும் அளவுக்குப் பணிவாக நடந்துகொள்ளுங்கள். எனது மதத்தின் பெயரால் எனது சொந்த நாட்டு மக்களை அவமதிக்க எவராவது நினைத்தால், எனது பதில் தெளிவாக உள்ளது. எனது பெயரில் நிச்சயமாக இல்லை!
.
என்னைப் பொறுத்தவரை, நமது அரசியலமைப்பின் சாரம் அதன் 9, 10 மற்றும் 12 ஆகிய உறுப்புரைகளை ஒன்றாக வாசிக்கும்போதே மிகவும் தெளிவாகிறது. 9ஆவது உறுப்புரை பௌத்த மதத்திற்கு முதலிடம் அளித்து, புத்த சாசனத்தைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறது. அதே வாக்கியத்திற்குள்ளேயே அனைத்து மதங்களின் மத சுதந்திரத்தையும் உறுதி செய்கிறது. 10ஆவது உறுப்புரை ஒவ்வொருவரின் சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்தைப் பாதுகாக்கிறது. 12ஆவது உறுப்புரை சட்டத்தின் முன் சமத்துவத்தையும் சட்டத்தின் சமமான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. அந்த விதிகளின் அர்த்தம் நாம் ஒருவருக்கொருவர் நடந்துகொள்ளும் விதத்திலும் தெரியவரும்போதே இந்தச் சமநிலை பாதுகாக்கப்படுகிறது.
.
இந்தக் கருத்தால் மனம் புண்பட்ட எனது பௌத்த சகோதர சகோதரிகளே, உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகின்றன. உங்களிடம் நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். ஒருவரின் வார்த்தைகளை முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் தாக்குதல் நடத்துவதற்கான காரணமாக மாற்ற வேண்டாம். உங்கள் திருமணத்துக்கும் துக்க நிகழ்ச்சிக்கும் வந்த, கஷ்டமான நேரத்தில் உங்கள் அருகில் நின்ற முஸ்லிம் அண்டை வீட்டாரைப் பற்றி ஒரு கணம் சிந்தியுங்கள். நீங்கள் இருவருமே அறியாத ஒருவரின் வார்த்தைகளுக்காக, பல வருடங்களாக உங்களுக்கு இடையே உருவான அந்த உறவை ஏன் சிதைக்க அனுமதிக்கிறீர்கள்?
.
இனிப் போதும். பிரிவினையால் இந்த நாடு கொடுத்துள்ள விலை மிகவும் அதிகம். இன்று நாம் ஒருவருக்கொருவர் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதைப் பார்த்தே நமது பிள்ளைகள் ஒன்றாக வாழக் கற்றுக்கொள்கிறார்கள். எனது பிள்ளையும் உங்கள் பிள்ளையும் அருகருகே நின்று “ரத்னதீப ஜன்ம பூமி” என்று பாடும்போது, தங்களுக்கு இந்த நாடு எந்தளவுக்குச் சொந்தமானது என்ற சந்தேகம் ஒரு கணமேனும் ஏற்படாமல் இருக்கட்டும்.
.
இது நாம் அனைவரின் தாய்நாடு.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button